இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜி. மாதவன் நாயர் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான பாரத் அஸ்மிதா தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
நமது நாட்டிற்கு இவர்கள் ஆற்றிய சீரிய சேவையைப் பாராட்டி இந்த விருதுகளை, புது டெல்லியில் இன்று நடந்த விழாவில், குடியரசு துணைத் தலைவர் எம். ஹமீது அன்சாரி வழங்கினார்.
பாரத் அஸ்மிதா ஜன ஜாக்ரன்ட் ஸ்ரீஸ்தா விருது, மஸ்தூர் கிசான் சக்தி சங்கதனின் நிறுவனர்களான அருணா ராய், நிகில் டே, சங்கர் சிங் ஆகியோருக்கு இணைந்து அளிக்கப்பட்டது.
ஏழை எளியோருக்கு உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் இவர்கள் பணியாற்றி வருவதை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் சேகர் சௌத்திரி, மராட்டியத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாவ்னா கவாலி ஆகியோருக்கும் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.