மகாராஷ்டிராவில் நக்சல்கள் அட்டூழியம்: காவல்துறையினர் 15 பேர் பலி

திங்கள், 2 பிப்ரவரி 2009 (11:34 IST)
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 15 காவல்துறை அதிகாரிகளை நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

கட்சிரோலி மாவட்டத்தின் மர்கேகான் பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் சுமார் 15 பேர் கொண்ட காவல்துறை குழுவை ந‌க்சலைட் தீவிரவாதிகள் அதிரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காவல்துறை உதவி-ஆய்வாளர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 8 ஏ.கே-47 ரகத் துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்களை நக்சல்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த காவல்துறையினரின் உடல்களை மீட்டனர். பலியானவர்களின் உடல்கள் நேற்றிரவு மாவட்ட தலைமை காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இன்று பலியான காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், அவர்களின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்