மும்பை தாக்குதல் விசாரணை தொடர்கிறது-யு.எஸ்.

வெள்ளி, 30 ஜனவரி 2009 (11:42 IST)
மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை இன்னமும் நடைபெறுவதாகவும், இந்திய அதிகாரிகளுக்கு எஃப்பிஐ அதிகாரிகள் உதவி புரிவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

பாகிஸ்தான் நடத்தியுள்ள விசாரணையில், அந்நாட்டிற்கு வெளியே மும்பை தாக்குதல் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புக் குழு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் எங்கிருந்து திட்டமிடப்பட்டுள்ளது என்பதை கண்டறிவதற்காக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் அமெரிக்கா, இந்திய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

என்றாலும் பாகிஸ்தானின் விசாரணை தொடர்பான எந்தக் கேள்விக்கும் எஃப்.பி.ஐ எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ரிச்சர்ட் கோல்கோ கூறுகையில், இந்திய அதிகாரிகளுடன் தங்கள் அமைப்பினர் இணைந்து செயலாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி 10 பயங்கரவாதிகள் பல்வேறு விடுதிகளிலும், ரயில் நிலையத்திலும் புகுந்து நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் உட்பட 180 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டியிருப்பதுடன், தாக்குதலுக்கு காரணமான அமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியாவிற்கு தொடர்ந்து எஃப்பிஐ தகவல்களை பரிமாறிக் கொள்ளும் என்றும் செய்தித்தொடர்பாளர் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்