தேசப் பாதுகாப்பு நலன் கருதி இந்தியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
நமது நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தலை தடுப்பதோடு சட்டவிரோத குடியேற்றத்தையும், ஆள் மாறாட்ட மோசடி போன்ற சமூக விரோத செயல்களையும் தடுக்கும் பொருட்டும் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது.
இதற்கான அடையாள அட்டையில் அடையாள எண், புகைப்படம், விரல் ரேகை பதிவு, கண்விழி பதிவு (பயோமெட்ரிக்) ஆகியவை இருக்கும்.
முதலில் வாக்காளர்களுக்கும், பின்னர் படிப்படியாக 18 வயதிற்கு உட்பட்ட குடிமக்களுக்கும் அடையாள எண் வழங்கப்படும்.
இந்த அடையாள அட்டை மூலம் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பெறுவது எளிதாக அமையும்.
இந்த அடையாள அட்டை மூலம் ஒருவர் தொடர்பான அனைத்து தகவல்களையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம். மேலும் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் மாற்றினாலும் அனைத்து அரசு அமைப்புகளிலும் முகவரி உடனே மாற்றப்பட்டு விடும்.
அடையாள எண் வழங்கும் பணியை ``பிரத்யேக அடையாளத்திற்கான தேசிய ஆணையம்'' மேற்கொள்ளவுள்ளது. இதற்கான பணியை விரைவுப்படுத்த திட்டக்குழு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை அரசு முறைப்படி வெளியிட்டுள்ளது.