காஷ்மீர் மோதலில் 2 தீவிரவாதிகள், 2 படையினர் பலி
புதன், 28 ஜனவரி 2009 (16:43 IST)
வடக்கு காஷ்மீரில் பந்திபோரா, சோபர், ஹேண்ட்வாரா ஆகிய 3 இடங்களில் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேரும், படையினர் 2 பேரும் கொல்லப்பட்டனர் என்றும், மேலும் 3 படையினர் காயமடைந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரமுல்லா மாவட்டத்தில் சோபர் நகர எல்லையில் உள்ள அமர்கார்க் என்ற இடத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் நேற்று மாலை துவங்கி இன்று காலை முடிந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், அல் பாதர் என்ற இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதி அபு ஹம்சா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இம்மோதலில் சோஹன் சிங் என்ற படையினர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
குப்வாரா மாவட்டத்தில் ஹேண்ட்வாரா நகரத்தில் பகிஹாரா என்ற இடத்தில் நேற்று மதியம் முதல் நடந்து வரும் மற்றொரு மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் 2 படையினர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட தீவிரவாதியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
இதேபோல பந்திபோரா மாவட்டத்தில் அயட்முல்லா என்ற கிராமத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை வெளியேற்ற இன்று காலை முதல் நடந்து வரும் மோதலில், அப்துல் அஜீஸ் என்ற தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதல் நடந்து வரும் பகுதிகளுக்குக் கூடுதல் படையினர் விரைந்துள்ளதாகவும், மோதல் முடிந்த பிறகுதான் பிற விவரங்களைத் தெரிவிக்க இயலுமென்றும் பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.