மும்பை தாக்குதலில் பலியான 9 அதிகாரிகளுக்கு அசோக சக்ரா விருது

திங்கள், 26 ஜனவரி 2009 (16:23 IST)
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த 60வது குடியரசு தினவிழாவில் மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினர், அதிரடிப்படை அதிகாரிகள் 9 பேருக்கு அறிவிக்கப்பட்ட அசோக சக்ரா விருதை அவர்கள் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.













மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரே, மும்பை காவல்துறையின் அசோக் காம்தே, இன்ஸ்பெக்டர் விஜய் சலாஸ்கர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம், தேசிய பாதுகாப்பு அதிரடி படைவீரர் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், ஹவில்தார் கஜேந்தர் சிங் ஆகியோர் உட்பட 9 பேருக்கு மரணத்துக்கு பிந்தைய கௌரவமாக அசோக சக்ரா விருதுகளை பிரதீபா பாட்டீல் வழங்கினார்.

அதிகாரிகள் கார்கரே, விஜய் சலஸ்கார், துக்காராம் ஆகியோரின் மனைவிமார்கள் கண்ணீர் மல்க மேடைக்கு வந்து விருதை பெற்றுக் கொண்டனர். உன்னி கிருஷ்ணன் சார்பில் அவரது தாயார் விருதை பெற்றுக் கொண்டார்.

இன்றைய குடியரசு தின விழாவில் மொத்தம் 11 பேருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.