இருதய வால்வுகளில் இருக்கும் அடைப்புகளை அகற்ற பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வென்டிலேட்டர் நீக்கப்பட்டு சுயமாகவே சுவாசித்து வருவதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
76 வயதாகும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய வால்வுகளில் பல அடைப்புகள் இருந்ததால் நேற்று பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவரது நினைவு திரும்பிவிட்டார் என்றும், தனது குடும்பத்தார் மற்றும் மருத்துவர்களை பார்த்தார் என்றும் மும்பையின் ஆசியன் இருதய மையத்தின் மருத்துவர் ராமாகாண்ட் பாண்டா கூறினார். இவர் தான் பிரதமருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் குழுவின் தலைவர் ஆவார்.
மன்மோகன் சிங்கின் உடல்நிலை வேகமாக குணமடைந்து வருவதாகவும், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரையும் மருத்துவர்கள் நீக்கி விட்டனர் என்றும் அவர் கூறினார். மேலும், வென்டிலேட்டரை நீக்குவதுதான் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முக்கிய செயல் என்றும் மருத்துவர் பாண்டா கூறினார்.