அறுவை சிகிச்சை வெற்றி: நலமுடன் இருக்கிறார் பிரதமர்
சனி, 24 ஜனவரி 2009 (17:48 IST)
நெஞ்சுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த பிரதமருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும், பிரதமர் உடல்நலம் சீராக உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 7.30 மணியளவில் துவங்கிய அறுவை சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நடந்ததாகவும், இது வெற்றிகரமாக முடிந்தவடைந்ததைத் தொடர்ந்து இருதய சிகிச்சைப் பிரிவில் உள்ள பிரத்யேக தங்கும் அறைக்கு பிரதமர் மன்மோகன் சிங் மாற்றப்பட்டதாகவும் புதுடெல்லி இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பிரதமருக்கு அளிக்கப்பட வேண்டிய அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 1990இல் இங்கிலாந்தில் பிரதமருக்கு பை-பாஸ் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின்னர் 2004இல் இருதயத்தில் உள்ள அடைப்புகளை நீக்க ஏஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடத்தப்பட்டது.
கடந்த 2007இல் பிராஸ்டேட் சுரப்பி அறுவை சிகிச்சையும், கடந்தாண்டு கண் புரை நீக்கும் சிகிச்சையும் செய்யப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.