ஆஸ்கர் விருதை முழுமையான அங்கீகாரமாக கருதக் கூடாது: அமிதாப் பச்சன்
சனி, 24 ஜனவரி 2009 (12:21 IST)
ஆஸ்கர் விருதை முழுமையான அங்கீகாரமாகக் கருதக் கூடாது என பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். எனினும், திரைக்குப் பின்னால் பணியாற்றியவர்களுக்கு ஆஸ்கர் விருது கிடைப்பது அவர்களுடைய திறமையை அங்கீகரிக்கிறது என்பதால் அதில் மகிழ்ச்சிதான் என்றும் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நேற்று மாலை நடந்த தன்னைப் பற்றிய “பச்சனாலியா” (Bachchanalia) என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய போது இதனை அமிதாப் பச்சன் தெரிவித்தார்.
இந்திய மொழிகளில் பல தரமான படங்கள் எடுக்கப்பட்டிருந்தும் கூட ஒரு சில படங்களே ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பெறுவது குறித்துக் கேட்டதற்கு, ஆஸ்கர் விருது பெறுவதுதான் சிறந்த அங்கீகாரம், அதுதான் உயரிய விருது என்று நாம் கருதுகிறோம்.
அவர்களுடைய இடத்தில் (ஹாலிவுட்) அவர்கள் சிறப்பானவர்கள். நம்முடைய இடத்தில் (இந்தியா) நாம் திறமையானவர்கள். எனவே ஆஸ்கர் விருதுதான் முழுமையான அங்கீகாரம் என்று கருதக் கூடாது என பதிலளித்தார்.
எனினும், இந்திய அளவில் 3 பேர் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்த பச்சன், அதிலும் குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த ஒலி இயக்குனர் (sound director) ரசூல் பொக்குட்டி பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது தனக்கு பெரும் சந்தோஷத்தை அளிப்பதாகக் கூறினார்.
அதே வேளையில் தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியாவுக்கான 2வது ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தரும் கலைஞராக இருப்பார் என்றும் அமிதாப் குறிப்பிட்டார்.
உலகளவில் ஆஸ்கர் விருதுக்கு என தனி இடம் உள்ளது. அதற்குரிய மரியாதையை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் நமது படைப்பை பாராட்டி ஆஸ்கர் விருதை அளிப்பதாக இருந்தால் அளிக்கலாம். அப்படி வழங்கவில்லை என்றாலும் இன்னும் நல்லதுதான் என்றார் அமிதாப்.