இந்தியாவில் 3.2 கோடி குழந்தைகளுக்கு க‌ல்‌வி‌, சுகாதார‌ம் இ‌ல்லை

வியாழன், 22 ஜனவரி 2009 (12:29 IST)
இந்தியாவில் 0- 6 வயதுள்ள சுமார் 3 கோடியே 20 லட்சம் குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதாரம் மற்றும் அடிப்படைக் கல்வி வசதிகள் கிடைப்பதில்லை என்று "இந்தியாவில் குழந்தைகளின் நிலை,2008" என்ற ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இந்த வயதுடைய குழந்தைகள் சமூகத்தில் மிகவும் ஏழ்மையான பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று குழந்தைகள் உரிமை மையம் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் இணை இயக்குனர் எனா‌க்‌ஷி கங்கூலி தெரிவித்துள்ளார்.

அதாவது நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் பெற்றோரின் குழந்தைகள், சிறைச்சாலையில் உள்ள தாய்மார்களின் குழந்தைகள், பாலியல் தொழிலில் உள்ள பெண்களின் குழந்தைகள், சிறப்புத் தேவை கோரும் கலகம், தீவிரவாதம், உள் நாட்டுச் சண்டை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அகதிகளாய் வந்தவர்களின் குழந்தைகள், அனாதை இல்லக் குழந்தைகள் ஆகிய பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதாரமும், கல்வியும் கிடைப்பதில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.

இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 13 சதவீதத்தினர் மட்டுமே பயனடைகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவைச் சேர்ந்த குழந்தைகளில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே இந்த அடிப்படை வசதிகள் ஓரளவுக்கு கிடைக்கிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம் எட்டாத குழந்தைகள் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்கள் என்று இரு பகுதிகளிலுமே உள்ளனர்.

ஐ.நா.வின் முக்கிய இலக்குகளான அனைத்துலக ஆரம்பக் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் இறப்பை தடுத்தல் ஆகியவை 2015 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆனால் அதற்கு வளர்ந்த, வளரும் நாடுகளின் தீவிர பங்களிப்பு தேவை என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்