டெல்லி குண்டு வெடிப்பு: தீவிரவாதிகள் சிறையில் அடைப்பு
புதன், 21 ஜனவரி 2009 (17:29 IST)
தலைநகர் டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள, இந்தியன் முஜாஹிதீன் இயக்கத் தீவிரவாதிகள் என்று கருதப்படும் 5 பேர் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
டெல்லியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடந்த, 26 பேரைப் பலிகொண்டதுடன் நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்திய, தொடர் குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக மொத்தம் 5 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மொஹம்மது சைஃப், ஜீஸன் அஹமது, ஜியா- உர் ரெஹ்மான், சாக்யுப் நிசார், மொஹம்மது ஷகீல் ஆகிய 5 பேரும், அகமதாபாத்தில் ஜூலை 26ஆம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் பற்றிய விசாரணைக்காக அக்டோபர் 27ஆம் தேதி குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இவர்கள் 5 பேரும் அகமதாபாத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி பெருநகரக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றம்சாற்றப்பட்டு உள்ளவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையைப் படித்த மாநகரக் குற்றவியல் நீதிமன்றத் தலைமை நீதிபதி காவேரி பவேஜா, 5 பேரையும் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக, குற்றம்சாற்றப்பட்டு உள்ளவர்கள் மீதான விசாரணையை துவங்குவதற்கான அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், பாரஹம்பா சாலையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் தடயவியல் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பாரஹம்பா சாலை, கரோல் பாக், கிரேட்டர் கைலாஸ்-1 ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் குற்றம்சாற்றப்பட்டுள்ள அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகலை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், தற்போது அகமதாபாத்தில் உள்ள, இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தின் இணை நிறுவனர் மொஹம்மது சாதிக் ஷேக் மற்றும் உறுப்பினர் குயாமுதீன் கபாடியா ஆகியோரை ஜனவரி 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.