புதிய ரக பிரம்மோஸ் ஏவுகணை இலக்கைத் தாக்கவில்லை

புதன், 21 ஜனவரி 2009 (13:54 IST)
ராஜஸ்தானின் போக்ரான் பகுதியில் இந்திய ராணுவம் நேற்று சோதனைக்கு உட்படுத்திய புதிய ரக பிரம்மோஸ் ஏவுகணை திட்டமிட்ட இலக்கை தாக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதிகாரிகள் கூறுகையில், “போக்ரான் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைத் சோதனை இறுதிக்கட்டத்தில் மட்டுமே சிக்கல் ஏற்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை தாக்கவில்லை. அதுபற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள” என்றனர்.

அணு ஆயுதத்துடன், ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் சென்று 290 கி.மீ. தொலைவரை உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை பிரம்மோஸ் ஏவுகணைக்கு உண்டு.

இதன் புதிய ரகத்தை (தரைவழித் தாக்குதலுக்கு பயன்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன) போக்ரான் பகுதியில் நேற்று இந்திய ராணுவம் சோதித்துப் பார்த்த நிலையில், திட்டமிட்ட இலக்கை ஏவுகணை தாக்கவில்லை என இன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்