விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக சாலைப் போக்குவரத்து குறைவாக உள்ள இடங்களிலும், ஒன்றுக்கு அருகில் மற்றொரு லெவல் கிராசிங் இருக்கும் இடங்களிலும் தேவையற்று உள்ளதை மூடிவிட ரயில்வே வாரியம் முடிவுசெய்துள்ளது.
ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக ரயில்வே வாரியம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆளில்லா லெவல் கிராசிங்குகளின் எண்ணிக்கையை குறைத்து அந்த இடங்களில் சிறிய சுரங்கப்பாதைகளை அமைப்பதை பரிசீலிக்குமாறு அனைத்து மண்டல ரயில்வே அலுவலகங்களையும் அறிவுறுத்தி, அதற்கான அதிகாரத்தையும் வாரியம் அளித்துள்ளது.
வரையறுக்கப்பட்ட சிறிய சுரங்கப்பாதை அமைப்பதற்கு ரூ.50 லட்சம் வரையிலும், இருவழி இருப்புப் பாதையில் சாதாரண உயரமுள்ள சுரங்கப்பாதை அமைப்பதற்கு ரூ.1.5 கோடி வரையிலும், ஒரு வழிப்பாதையில் சுரங்கப்பாதை அமைக்க ரூ.1.25 கோடி வரையிலும் செலவிட ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன்படி நாடெங்கிலும் 547 இடங்களில் சிறிய சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளன.
ஆளில்லா லெவல் கிராசிங்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, சாலைப் போக்குவரத்து குறைவாக உள்ள இடங்களிலும், அருகில் மற்றொரு லெவல் கிராசிங் இருக்கும் இடங்களிலும் கூடுதலாக உள்ளவற்றை மூடிவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளில்லா லெவல் கிராசிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பொது மக்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.