தேர்தல் கருத்துக் கணிப்புக்கள் : உச்ச நீதிமன்றம் கருத்து
திங்கள், 19 ஜனவரி 2009 (18:28 IST)
தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய பிந்தைய கருத்துக் கணிப்புக்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு கூறி வழக்கை நிராகரித்தது.
உச்ச நீதிமன்றத்தில் டி.கே. தாகூர் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், உண்மையான வெளிப்படையான வாக்குப்பதிவு என்ற கொள்கையை மீறுவதன் மூலம், வாக்காளர்களின் மனதைக் குழப்பித் தேர்தல் முடிவுகளையே மாற்றும் வேலையை வாக்குப்பதிவிற்கு முந்தைய பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் செய்கின்றன என்பதால், ஜனநாயகத்தை நலனைக் கருத்தில்கொண்டு இத்தகைய கருத்துக்கணிப்புகளை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்விற்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் எழுப்பியுள்ள தேர்தல் கருத்துக் கணிப்புக்கள் தொடர்பான விவகாரம் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், தேர்தலிற்கு முந்தைய பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் எதையும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடியும் வரை வெளியிடக்கூடாது என்பதைக் கட்டாயமாக்கும் சட்ட வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் தந்துவிட்டது. இந்தச் சட்ட வரைவு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது, விரைவில் மக்களவையிலும் அரசால் தாக்கல் செய்யப்படவிருக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து வழக்கை நிராகரித்த நீதிபதிகள், இதுகுறித்துத் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு உத்தரவிட்டனர்.