பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் வியாழன் குறைக்கப்படும்!

செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:35 IST)
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு தொடர்பான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதையடுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வேண்டும் என்று கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் மத்திய அரசிற்கு கோரிக்கைகள் குவிந்துவரும் நிலையில், நாளை மறுநாள் கூடவுள்ள மத்திய அமைச்சரவை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைப்பது குறித்து முடிவு செய்ய உள்ளது.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு விலை உருளை ஒன்றிற்கு 25 ரூபாயும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோலிற்கு ரூ.9.70மும், ஒரு லிட்டர் டீசலில் ரூ.3.70மும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இலாபம் கிடைத்தாலும், சமையல் எரிவாயு உருளை ஒன்றிற்கு ரூ.31.70 நட்டம் ஏற்படுவதாக பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.

இதேபோல மண்ணெண்ணைக்கு அளிக்கப்படும் மானியமும் சேர்ப்பதால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் இழைப்பை ஈடுகட்ட இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.30,000 கோடிக்கு பத்திரங்களை வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்கும் முடிவு எடுக்கக் கூடும் அமைச்சகத்திடம், இப்பொருட்களை விலைக் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கும் பரிந்துரையை பெட்ரோலிய அமைச்சகம் செய்துள்ளது. அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கு தக்கவாறு பெட்ரோல், டீசல் விலைகளை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்தவோ குறைக்கவோ அதிகாரம் அளிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்