பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்: லாரி உரிமையாளர்களுக்கு அமைச்சர் பாலு அழைப்பு

சனி, 10 ஜனவரி 2009 (19:17 IST)
டீசல் விலை குறைப்பு, வாகன வரி குறைப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் லாரி உரிமையாளர்களை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு சாலை போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு அழைத்துள்ளார்.

லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்று டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் பாலு, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சனையை மேலும் சிக்கலாக்க தான் விரும்பவில்லை என்று கூறினார்.

“எனது அமைச்சகத்தில் அவர்களும் ஒரு அங்கம்தான், கடுமையான நடவடிக்கைகள் எடுத்து பிரச்சனையை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை. அவர்கள் இப்போதும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வரலாம்” என்று கூறிய பாலுவிடம், கைது செய்யப்பட்டுள்ள தங்கள் அமைப்பின் நிர்வாகிகளை விடுதலை செய்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று அவர்கள் கூறியிருப்பதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியதற்கு, அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பின் தலைவர் சரன்சிங் லோஹராவும், செயலர் வேணுகோபாலும்தான் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர் வந்து அரசுடன் பேசலாமே என்று கூறினார்.

லாரி உரிமையாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தையடுத்து அத்யாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தினை பிரகடனம் செய்த மத்திய அரசு, அரசு உரிமம் பெறாத லாரிகளை அத்யாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்