ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதி பெண் குழந்தை நாளாக கடைபிடிக்கப்படும் என்று மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் ரேணுகா சௌத்ரி தெரிவித்தார்.
சென்னையில் நடந்து வரும் அயல்நாடுவாழ் இந்தியர் மாநாட்டில் நடைபெற்ற அயல்நாடுவாழ் இந்திய பெண்கள் நலனுக்கான கருத்துப் பகிர்வில் பேசிய அவர், அயலநாடுகளில் வாழும் இந்திய பெண்கள், தங்களது திருமண வாழ்க்கையில் வன்முறையால் பாதிக்கப்படுவதாக புகார்கள் உள்ளன என்றார்.
கணவரால் வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள், நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய புகாரைத் தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், அயல்நாடுகளில் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ள இந்திய பெண்களும் பல்வேறு கொடூமைகளுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்தார்.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உள்ளாகும் போதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்கள் தங்களது பாஸ்போர்ட் மற்றும் உரிய ஆவணங்களுடன் இந்திய தூதரகங்களை அணுகுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.