மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டது போன்ற பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்படுமானால், அதற்கு பாகிஸ்தான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் போன்றவர்களுக்கு தங்கள் மண்ணில் இடம் கொடுக்கப்படாது என்ற உறுதியை பாகிஸ்தான் அளிக்க வேண்டும் என்றும் புதுடெல்லியில் தனியால் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
பாகிஸ்தானிடம் இருந்து தற்போது இந்தியா எதனை விரும்புகிறது என்றால், எந்தவொரு பயங்கரவாத அமைப்புகளும், அல்லது அவற்றைச் சேர்ந்தவர்களுக்கும் தங்கள் மண்ணில் இடமில்லை என்று உறுதியான உத்தரவாதத்தை அந்நாடு அளிக்க வேண்டும் என்பதைத்தான் என்று ப. சிதம்பரம் கூறினார்.
அதுபோன்ற உறுதியை வெறும் காகிதத்தில் அளித்தால் மட்டும் போதாது என்று குறிப்பிட்ட அவர், சர்வதேச நாடுகளுக்கு இந்த உறுதியை பாகிஸ்தான் அளிக்க வேண்டும் என்றார்.
மீண்டும் ஒரு தாக்குதல் இந்தியாவில் நடத்தப்படுமேயானால் அதற்குரிய விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டி வரும். அந்த விலை மிகப்பெரியதாக இருக்கும் என்றார் சிதம்பரம்.
அதற்காக தாக்குதல் நடத்தப்பட்டால், உடனடியாக இந்தியா போர் தொடுக்கும் என்று அர்த்தமல்ல; போர் என்ற வார்த்தையையே தாம் உபயோகிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மும்பை தாக்குதல் குறித்து கூட்டு விசாரணை நடத்த பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், தாக்குதலில் கைதாகியுள்ள அமீர் அஜ்மால் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதை அந்த நாடு ஒப்புக் கொண்டால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் ப. சிதம்பரம் கூறினார்.