ஆருஷி வழக்கு: சிபிஐக்கு உதவ ராஜ்குமார் முடிவு

சனி, 3 ஜனவரி 2009 (12:26 IST)
தலைநகர் டெல்லியை அடுத்துள்ள நொய்டாவில் ஆருஷி என்ற பள்ளி மாணவியும், அவரது வீட்டு வேலைக்காரர் ஹேமராஜூம் கொலை செய்யப்பட்ட வழக்கில், மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) விசாரணைக்கு உதவுவதாக ஜாமீனில் விடுதலையான ராஜ்குமார் கூறியிருக்கிறார்.

டெல்லியையே உலுக்கிய இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து, முதலில் உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணை நடத்தியது. பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

கொலை செய்யப்பட்ட ஆருஷியின் தந்தை டாக்டர் ராஜேஷ் தல்வாருக்கும், அவருடன் மருத்துவமனை நடத்தி வரும் துரானிக்கும் இடையே இருந்த உறவு ஆருஷிக்கு தெரிய வந்ததால், ஆருஷியை அவரது தந்தையே கொலை செய்ததாக கூறப்பட்டு ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஹேமராஜைப் பார்க்க வந்த துரானியின் வீட்டு வேலைக்காரர் ராஜ்குமாருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்தது. இதற்கிடைய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஆதாரம் இல்லாதால், ராஜேஷ் தல்வார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து ராஜ்குமாரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். என்றாலும் இந்த இரட்டைக் கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆருஷியின் மொபைல் போன் உள்ளிட்டவற்றை கைப்பற்ற முடியாமல் போனதால், கொலைக்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இதனால் கடந்த ராஜ்குமாரையும் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உதவுமாறு சிபிஐ அதிகாரிகள், ராஜ்குமாரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அவரும், தனது முழு ஒத்துழைப்பை அளிப்பதாகக் கூறியுள்ளார். என்றாலும் ராஜ்குமாரின் வழக்கறிஞர் நரேஷ் யாதவ் இதுபற்றி கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

சிபிஐ செய்தித்தொடர்பாளர் ஹர்ஷ் பால் கூறுகையில், ஆருஷி கொலை வழக்கு விசாரணை குறித்து இப்போதே எதையும் தெரிவிக்க முடியாது என்றார்.

டெல்லியை உலுக்கிய இரட்டைக் கொலை வழக்கு என்பதுடன், மிகவும் பரபரப்பாக தனியார் செய்தி சேனல்களில் இடம்பெற்ற இந்த வழக்கு தற்போது எவ்வித ஆதாரமும் கிடைக்காத நிலையில், அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்