டெல்லியில் கடும் மூடுபனி; போக்குவரத்து பாதிப்பு

சனி, 3 ஜனவரி 2009 (12:09 IST)
தலைநகர் டெல்லியில் மிகவும் குறைந்த வெப்பநிலை பதிவான மறுநாளே, கடும் மூடுபனி நிலவியது. இதனால் ரயில் மற்றும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

அடர்த்தியான மூடுபனி காரணமாக 50 மீட்டருக்குள் உள்ள பொருட்களே கண்ணுக்குத் தெரிவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அதிகாலையில் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும்
அலுவலகத்திற்குச் செல்வோர் தங்களின் வாகனங்களின் முகப்பு விளக்குகளை போட்ட வண்ணம் சென்றனர்.

விமானநிலையத்தைப் பொருத்தவரை 100 மீட்டர் இடைவெளியில் ஓடுபாதையில் எதுவும் தெரியாததால், விமானங்கள் வரத்து, புறப்பாடு பெரிதும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த 16 உள்நாட்டு விமானங்களும், 8 சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாகவும், 6 உள்நாட்டு விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறின.

70க்கும் மேற்பட்ட ரயில்கள் 3 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்து சேர்ந்தன. இந்த மூடுபனி மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும், இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5.4 செல்சியஸாக பதிவானதாகவும் டெல்லி வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்