டெல்லியில் தொடரும் குளிர்; போக்குவரத்து பாதிப்பு

வெள்ளி, 2 ஜனவரி 2009 (12:32 IST)
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே நீடித்து வரும் கடுமையான குளிரின் உச்ச கட்டமாக இன்று அதிகாலை 4.4 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவானது.

கடந்த 5 ஆண்டுகளில் நேற்று நள்ளிரவில்தான் மிகவும் குறைந்த வெப்பநிலை பதிவானதாக டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளிச்சமின்மையால், காலையில் அலுவலகங்களுக்கு செல்வோர், வாகனங்களில் முன்பக்க விளக்குகளை போட்ட வண்ணம் மெதுவாகவே சென்றனர்.

சூரிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லிக்கு வரும் மற்றும் டெல்லியில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

என்றாலும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானப்போக்குவரத்து ஓரளவுக்கு சீரடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான மூடுபனி நிலவியதால், முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 2 விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமாக புறப்பட்டுச் சென்றதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்