குவஹாத்தி தொடர் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

வெள்ளி, 2 ஜனவரி 2009 (11:24 IST)
தலைநகர் குவஹாத்தியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 60 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குவஹாத்தியின் பிருபுரி பகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனை அருகே நேற்று மதியம் 2.30 மணிக்கு வெடிகுண்டு வெடித்தது. இதில் 10 வயது சிறுவன் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து சில நிமிடங்களிலேயே மக்கள் நெருக்கடி மிகுந்த பூத்நாத் மார்க்கெட் பகுதியில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா கோயில் அருகே மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாலை 5.45 மணியளவில், பங்காகர் பகுதியில் 3வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளை குறி வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 34 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று குவஹாத்தி சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதாக இருந்தார். ஆனால் அவர் வருவதற்கு சில மணி நேரம் முன்பாகவே பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பை நடத்தியுள்ளது அஸ்ஸாமின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக கருத்துகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய், பாதுபாப்பு குறைபாடுகள் இருந்திருக்கலாம். பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள மாநில காவல்துறையினருக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்