அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு: 12 பேர் காயம்

வெள்ளி, 2 ஜனவரி 2009 (10:57 IST)
அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியின் 3 முக்கிய இடங்களில் இன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது. இதில் 12 பேர் காயமடைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவஹாத்தியின் பிருபாரி, பூத்நாத், பங்காகர் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 5.30 மணியளவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் பூத்நாத் பகுதியில் மட்டும் 2 குண்டுகள் வெடித்ததாக தொலைக்காட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குவஹாத்திக்கு வருகை தர சில மணி நேரமே இருந்த நிலையில், புத்தாண்டு தினமான இன்று தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவஹாத்தியில் வைக்கப்பட்ட குண்டுகள் அதிக சக்தி வாய்ந்தவை இல்லை என்றாலும், காயமடைந்த 12 பேரில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் இது உல்ஃபா அமைப்பினரின் கைவரிசையாக இருக்கலாம் என காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 அக்டோபர் 28ஆம் தேதி அஸ்ஸாமில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதுகுறித்த விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், புத்தாண்டு தினமான இன்று குவஹாத்தியில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்