ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: எக்கட்சிக்கும் பெரும்பான்மையில்லை

ஞாயிறு, 28 டிசம்பர் 2008 (12:23 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பக்கட்ட தகவலின்படி அங்கு எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது.

எனவே தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பிடிபி) சம அளவிலான தொகுதிகளில் முன்னணியில் இருந்து வருகின்றன.

ஜம்முவைப் பொருத்தவரை காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஜ்ம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 6 மாத காலமாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வருகிறது.

இதையடுத்து தேர்தல் நடத்தப்பட்டு இன்று காலை 9 மணிக்கு 22 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முழு அளவிலான முடிவுகளும் இன்று மாலைக்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவாக இந்த முறை 61.5 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்