விமானநிலைய பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவு
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (18:15 IST)
பயங்கரவாதத் தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளதால் விமான நிலையங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும்படி மாநில அரசுகள், பாதுகாப்பு அமைப்புகளுக்கு விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லியில் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இதுபற்றி மேலும் விவரிக்கவில்லை.
மும்பை தாக்குதலுக்குப் பின்னர் அனைத்து விமான நிலையங்களுக்கும் பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படும் என்பதால், பாதுகாப்பை தீவிரப்படுத்தும்படி அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும், விமான போக்குவரத்துத் துறை செயலர் எம்.மாதவன் நம்பியார் கடிதம் அனுப்பியிருந்தார்.
அக்கடிதம் கிடைத்த பின்னர் நாட்டின் அனைத்து விமானநிலையங்களும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இன்று மத்திய அரசு விமானநிலையங்களுக்கான பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.