அஜ்மல் அமீர் கஸாப் காவல் ஜனவரி 6 வரை நீட்டிப்பு

புதன், 24 டிசம்பர் 2008 (13:19 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில், இந்திய அதிகாரிக‌ளிட‌ம் பிடி‌ப‌ட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் அமீர் கஸாப் மீதான காவலை வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 26ஆம் தேதி மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது கைது செய்யப்பட்ட கஸாப், 27ஆம் தேதி முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவரது காவலை டிசம்பர் 24ஆம் தேதி வரை மும்பை நீதிமன்றம் நீட்டித்திருந்தது.

இதையடுத்து நீதிபதி என்.ஸ்ரீமங்கலே, அரசு வழக்கறிஞர் ஏக்நாத் ஆகியோர் மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு சிறையில் உள்ள கஸாப்பிடம் இன்று விசாரித்தனர். இதன் பின்னர் கஸாப் காவலை ஜனவரி 6ஆம் தேதி வரை நீட்டிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

பாகிஸ்தானியரான கஸாப் மீது கொலை, கொலை முயற்சி, போர் மூள காரணமாக இருந்தது, ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்தியது உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தனது சார்பில் வாதாட பாகிஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கஸாப் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்