கார்கரே கொலைக்குப் பின்னால் எந்தச் சதியும் இல்லை: மத்திய அரசு!
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (18:02 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின்போது மராட்டிய காவல் அதிகாரி ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டதற்குப் பின்னால் சதி இருப்பதாக சந்தேகம் தெரிவித்த அமைச்சர் அந்துலேவின் கருத்துக்களை நிராகரித்துள்ள மத்திய அரசு, இதுபோன்ற செய்திகள் தவறானவை, மிகவும் வருந்தத்தக்கவை என்று கூறியுள்ளது.
மக்களவையில் இன்று, அந்துலேவைப் பதவியைவிட்டு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க., சிவசேனா உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து முழக்கமிட்டதால் எழுந்த அமளியின் இடையே, உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிக்கை வாசிக்க எழுந்தார்.
ஆனால், சிதம்பரம் தனது அறிக்கையைத் தொடர்ந்து வாசிக்க விடாமல் பா.ஜ.க. உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியபடியும், வெளிநடப்பு செய்தவாறும் இருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அமைச்சர் சிதம்பரம் தனது அறிக்கையை வாசித்த பிறகு அத்வானி பேச வாய்ப்பளிப்பதாக அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியதையும் பா.ஜ.க. உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவையில் தொடர்ந்து அமளி நிலவியதால் அமைச்சர் சிதம்பரம் தனது அறிக்கையை வாசிக்காமல் சமர்ப்பித்தார்.
இதையடுத்து அவை 2.00 மணி வரை தள்ளிவைக்கப்பட்டது.
சிதம்பரம் அறிக்கை விவரம்
சிதம்பரம் தனது அறிக்கையில், "மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோது கார்கரே உள்ளிட்ட மராட்டிய காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டது தொடர்பான சந்தேகங்களில் எந்த உண்மையும் இல்லை என்ற முடிவிற்கு விசாரணை அதிகாரிகள் வந்துள்ளனர்.
குறிப்பிட்ட நாளில் கார்கரே சென்ற இடங்கள் தொடர்பாக கூறப்படும் வெவ்வேறு கருத்துக்களிலும் உண்மை இல்லை.
சம்பவத்தன்று கார்கரே உள்ளிட்ட மூன்று முக்கிய காவல் அதிகாரிகளும் ஒரே குவாலிஸ் காரில் சென்றதும், துப்பாக்கிச்சூட்டிற்கு இரையானதும் துரதிர்ஷ்டவசமானது.
கார்கரே கொல்லப்படுவதற்கு முன்னால், மாலேகான் குண்டு வெடிப்புகள் வழக்கில் அவர் நடத்தும் விசாரணையின் உண்மைத்தன்மை பற்றிக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவர் பலியான பிறகு, அவர் கொல்லப்பட்டது தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. எனது பார்வையில், இந்த இரண்டுமே தவறானதும், மிகவும் வருந்தத்தக்கதும் ஆகும்" என்று கூறியுள்ளார்.