சார்க் உணவு வங்கிக்கு 1.5 லட்சம் டன் உணவு தானியங்கள் வழங்குகிறது இந்தியா
திங்கள், 22 டிசம்பர் 2008 (17:31 IST)
சார்க் உணவு வங்கிக்கு, இந்தியாவின் சார்பில் 1,53,200 டன் உணவு தானியங்கள் வழங்கப்பட உள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த வேளாண்மை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அகிலேஷ் பிரசாத் சிங் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் உணவுப் பாதுகாப்புக்காக 2,43,300 டன் உணவு தானியங்கள் கையிருப்புடன் இந்த உணவு வங்கி அமைக்கப்பட்டுள்ளது. சார்க் உணவு வங்கி இந்த ஆண்டு அக்டோபர் 15, 16 தேதிகளில் நடைபெற்ற உணவு வங்கி தொடர்பான முதல் கூட்டத்தை அடுத்து செயல்படத் துவங்கியது.
இந்த உணவு வங்கிக்கு ஆப்கானிஸ்தான்- 1,420 டன், பங்களாதேஷ் 40,000 டன், பூட்டான் 150 டன், மாலத்தீவுகள் 200 டன், நேபாளம் 4,000 டன், பாகிஸ்தான் 40,000 டன், இலங்கை 4,000 டன் உணவு தானியங்களை அளிக்கவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.