எல்லா வழிகளும் திறந்தே உள்ளன: பிரணாப்

திங்கள், 22 டிசம்பர் 2008 (13:20 IST)
போரைப் பற்றி எவரும் ஊடகங்களில் பேசுவதில்லை என்று கூறியுள்ள இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் தொடர்பாக எல்லா வழிகளும் திறந்தே உள்ளது என்று கூறியுள்ளார்.

புதுடெல்லியில் இன்று இந்திய தூதர்களின் கூட்டத்தை துவக்கி வைத்துப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, “பயங்கரவாத நடவடிக்கைகளை தங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று அளித்த உறுதியில் இருந்து பாகிஸ்தான் தப்பிக்க முடியாது, எந்த ஒரு பொறுப்புள்ள நாடும் தனது உறுதிமொழியில் இருந்து பின்வாங்குவதில்லை” என்று கூறினார்.

“பாகிஸ்தான் தனது உறுதிமொழிகளையும் காப்பாற்றியாக வேண்டும். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். ஒரு பொறுப்புள்ள நாடு தான் அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். இந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெருக்குவோம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான எல்லா வழிகளும் திறந்தே உள்ளன” என்று பிரணாப் கூறினார்.

அப்படியானால், இராணுவ நடவடிக்கை கூட அதில் ஒரு வழியா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இராணுவ நடவடிக்கை பற்றிக் கேட்கிறீர்கள், அதனை யாரும் ஊடகங்களிடம் பேசுவதில்லை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது. நாங்கள் எல்லா வழிகளையும் திறந்தே வைத்துள்ளோம்” என்று பதிலளித்த பிரணாப் முகர்ஜி, “இராணுவ நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்புவது உங்களுக்கும் பயனளிக்காது, எனக்கும் பயனளிக்காது” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்