பாக்.உடனான அமைதிப் பேச்சைக் கைவிட வேண்டும்: பா.ஜ.க.!
சனி, 20 டிசம்பர் 2008 (13:20 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளில் ஐ.மு.கூ. அரசின் பிடி தளர்ந்து விட்டதாகக் குற்றம்சாற்றியுள்ள பா.ஜ.க., இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்றத் தவறும் பாகிஸ்தான் அரசுடனான அமைதிப் பேச்சை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சியின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க. தலைவர் யஸ்வந்த் சின்ஹா, பாகிஸ்தான் விடயத்தில் மூத்த மத்திய அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருவதால் மத்திய அரசிற்குள் ஒருங்கிணைப்பு இல்லையோ என்று தோன்றுகிறது என்றார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தான் சக்திகளுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரங்களுடன், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பிரதிநிதிகளை அனுப்பி, அந்த நாடுகள் மூலம் பாகிஸ்தானிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் அவர். யஸ்வந்த் சின்ஹா முன்னாள் அயலுறவு அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
"மத்திய அரசின் பிடி கடந்த சில நாட்களாக பலத்திற்கும் பலவீனத்திற்கும் இடையில், ஏதொவொரு வகையில் தளர்ந்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசு வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் விடயத்தில் ஒரே நாளில் அயலுறவு அமைச்சர் (பிரணாப்) ஒன்றைக் கூறுகிறார். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி வேறு ஒன்றைக் கூறுகிறார். மத்திய அரசின் பேச்சாளர்கள் இடையில் ஒற்றுமையும், இசைந்து போகும் பண்பும் இருந்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.
அமைச்சர்கள் தங்களுக்குள் நிறைய விவாதித்து தெளிவான முடிவை எடுக்க வேண்டும். ஆனால் அந்தப் பண்பு மத்திய அமைச்சர்களிடம் இல்லை என்றே நான் கருதுகிறேன்" என்றார் சின்ஹா.
பாகிஸ்தான் குறித்துக் கேட்டதற்கு, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சு நிறுத்தப்படுவதைவிட கைவிடப்பட வேண்டும் என்றார் யஸ்வந்த் சின்ஹா.