அந்துலே விவகாரம்: நாடாளுமன்றத்தில் மீண்டும் அமளி!
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (16:25 IST)
மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டது தொடர்பாகச் சந்தேகம் எழுப்பியுள்ள அமைச்சர் அந்துலேவைப் பதவிநீக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் பா.ஜ.க. இன்று மீண்டும் கோரிக்கை விடுத்தது.
மக்களவையில் கடந்த இரண்டு நாட்களில் இன்று மூன்றாவது முறையாக இந்த விவகாரத்தை பா.ஜ.க. எழுப்பியது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட நாம் ஒன்றுபட்டுள்ள இந்த நேரத்தில், அமைச்சர் அந்துலேவின் கருத்துக்கள் பொருத்தமற்றுள்ளன என்று மூத்த பா.ஜ.க. உறுப்பினர் சுமித்ரா மகாஜன் கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை அந்துலேவின் கருத்துக்கள் பலவீனப்படுத்திவிடும் என்று கூறிய மகாஜன், மூத்த அரசியல்வாதியான அந்துலே பொறுப்பில்லாமல் பேசியுள்ளார் என்று குற்றம்சாற்றினார்.
மத்திய அமைச்சரவையில் இருந்து அந்துலே உடனடியாகப் பதவிவிலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மகாஜன், அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு இன்னும் தாமதம் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாள்தோறும் எழுப்புவதற்கு இந்த விவகாரத்தில் ஒன்றும் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும், அந்துலே விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
இதேபோல, மாநிலங்களவையிலும் பா.ஜ.க. உறுப்பினர்கள், அமைச்சர் அந்துலேவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி இன்று மீண்டும் முழக்கமிட்டனர். இதற்குக் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி நிலவியது.