ஆள் கடத்தல் வழக்குகளில் பல்நோக்கு நடவடிக்கை: பிரணாப்!
வியாழன், 18 டிசம்பர் 2008 (15:45 IST)
ஆள் கடத்தல் வழக்குகளில் பல்நோக்கு அணுகுமுறை கடைபிடிக்கப்படும் என்று மாநிலங்களவையில் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்தார்.
அயல்நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டுப் பிடிபடுபவர்களில் இந்தியர்கள் யாராவது இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களைக் காப்பாற்றுதல், தாயகத்திற்குத் திரும்ப அழைத்து வருதல், அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஆள் கடத்தல் வழக்குகளில் பல்நோக்கு அணுகுமுறை கடைபிடிக்கப்படும் என்று அவர் கூறினார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, லண்டனிற்குச் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் நிலை குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சத்யவிராட் சதுர்வேதி, மோதிலால் வோரா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஆள் கடத்தல் விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மொத்தம் 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரே ஒருவர் மட்டுமே இந்தியர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் 20 சதுர அடி பரப்பளவுள்ள அறையில் 28 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றுதான் பெல்ஜியம் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார் என்றார்.
மேலும், "குறைவான ஊதியத்திற்கு ஆட்கள் தேவைப்படும் மேற்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏராளமானோர்- அடிப்படையில் வேலை தேடுவோர் தன்னிச்சையாகப் போகின்றனர். இதில் அரசின் பங்கு ஒன்றும் இல்லை. வளைகுடா நாடுகளில் குடியேற்றச் சட்டங்கள் மிகக் கடுமையாக உள்ளன, ஆனால் ஐரோப்பிய நாடுகளில் தளர்வாக உள்ளன.
அந்நாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை குறித்த சரியான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஏனெனில் உண்மையான இந்தியர்களுக்கு மட்டுமே நமது அதிகாரிகள் உதவி செய்கின்றனர். இந்தியர் என்று கூறிக்கொள்ளும் பாகிஸ்தானியர், வங்காளதேசத்தவர் ஆகியோருக்கு உதவுவதில்லை. இன்னும் பலர் தங்களின் அடையாளத்தை அழித்துவிட்டனர்.
ஆள் கடத்தல் தொடர்பாக பிரிட்டனுடன் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் நன்கு வேலை செய்கிறது. கடந்த ஜூலை வரை 844 இந்தியர்கள் உட்பட 1395 சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் சுமார் 100,000 பேர் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளனர்." என்றார் பிரணாப் முகர்ஜி.