பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும்: சிதம்பரம்!
புதன், 17 டிசம்பர் 2008 (19:12 IST)
எதிர்காலத்தில் தேவையை முன்னிட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம் மக்களவையில் உறுதியளித்தார்.
மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தேசப் புலனாய்வு முகமை சட்டவரைவு, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த வரைவு ஆகியவற்றின் மீதான விவாதத்தை இன்று துவங்கி வைத்துப் பேசிய அமைச்சர் பா. சிதம்பரம், "இப்போது இந்தச் சட்டவரைவுகளை நிறைவேற்றித் தாருங்கள். தேவைப்பட்டால் இந்தச் சட்டங்களை மேலும் கடுமையாக்கி, பிப்ரவரி மாதம் மீண்டும் நாடாளுமன்றத்தில் வைக்கிறேன்" என்று எதிர்க்கட்சிகளுக்கு வேணடுகோள் விடுத்தார்.
மும்பையில் 167 பேரைப் பலிகொண்டுள்ள பயங்கரத் தாக்குதல்கள் நடந்துள்ள இந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களின் ஒற்றுமையைக் காட்ட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய சிதம்பரம், நெருக்கடி கருதி பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டவரைவுகள் இரண்டையும் நிறைவேற்ற அரசிற்கு உதவுமாறு எதிர்க்கட்சிகளை வேண்டினார்.
"ஒட்டுமொத்த தேசமும் நம்மை கவனித்து வருகிறது. பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மத்திய முகமை ஒன்று தேவை என்று நாடு விரும்புகிறது" என்றார் அவர்.
"தேசப் புலனாய்வு முகமை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கினாலும், உள்ளூரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது அந்தந்த மாநில அரசுகளின் முக்கியக் கடமையாகும்.
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் உள்ளூர்க் காவல் துறையினருக்குக் கிடைத்தால், அவர்கள் அதை மத்திய அரசிற்குத் தெரிவிப்பதுடன், வழக்கம்போல மாநில அரசுகளுக்கும் தெரிவிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வழக்கின் தன்மையைப் பொறுத்து அதை தேசப் புலனாய்வு முகமை விசாரிக்கலாமா என்பதை மத்திய அரசு 15 நாட்களுக்குள் முடிவு செய்யும். தேசப் புலனாய்வு முகமை விசாரிக்கத் தகுதியானது அல்ல என்று தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வழக்கு மாநில அரசிடமே விடப்படும்.
தேசப் புலனாய்வு முகமையுன் மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும். விசாரணையின் இடையில் சம்பந்தப்பட்ட வழக்கு தனது விசாரணைக்குத் தகுதியானது அல்ல என்று தேசப் புலனாய்வு முகமை கருதினால், அந்த வழக்கை சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் ஒப்படைக்க தேசப் புலனாய்வு முகமையினால் முடியும்." என்று சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும், சட்டம்- ஒழுங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகளின் அதிகார வரம்புகளை மீறாத வகையில் தேசப் புலனாய்வு முகமை செயல்படும் என்றும், மனித உரிமைகள் எந்த வகையிலும் மீறப்படாத வகையில்தான் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும் சிதம்பரம் கூறினார்.