'வாக்கிற்குப் பணம்' : உள்துறை அமைச்சக விசாரணைக்கு சோம்நாத் பரிந்துரை!
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (17:24 IST)
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று பேர் குறித்து, உள்துறை அமைச்சக விசாரணைக்கு மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை மத்திய ஐ.மு.கூ. அரசு சந்தித்தபோது, அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி தங்களுக்கு ரூ.3 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக, பா.ஜ.க. எம்.பி.க்கள் அசோக் அர்கால், ஃபாகன் சிங், மகாவீர் பகோரா ஆகிய 3 பேர் புகார் எழுப்பியதுடன், அவையின் நடுவில் வந்து கத்தை கத்தையாகப் பணத்தைக் காட்டினர்.
இந்தப் பணத்தை சமாஜ்வாடி எம்.பி. அமர்சிங், காங்கிரஸ் எம்.பி. அகமது பட்டேல் ஆகியோர்தான் தங்களுக்குக் கொடுத்தனர் என்றும் அவர்கள் கூறினர். இததொடர்பாக சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சியும் சில வீடியோ ஆதாரங்களை கொடுத்தது.
இதுகுறித்து விசாரித்த காங்கிரஸ் எம்.பி. கிஷோர் சந்திர சூர்யநாராயண தியோ தலைமையிலான மக்களவைக் குழு, லஞ்சப் புகாரில் அமர்சிங், அகமது பட்டேல் ஆகியோருக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறியது.
மேலும், அமர்சிங்கின் உதவியாளர் என்று கூறப்படும் சஞ்சீவ் சக்சேனா, ஓட்டுநர் சோஹைல் ஹிந்துஸ்தானி, பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானியின் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி ஆகியோர் மீதான குற்றச்சாற்றுக்களை சம்பந்தப்பட்ட அமைப்பு விசாரிக்கவும் மக்களவைக் குழு பரிந்துரைத்தது.
இந்நிலையில், மேற்கண்ட மூவர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரிக்கும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று அறிவித்தார்.