பாகிஸ்தானின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை: இந்தியா!
புதன், 10 டிசம்பர் 2008 (20:15 IST)
பயங்கரவாதத்தை ஒடுக்கப் பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்று கூறியுள்ள மத்திய அரசு, இந்தியா கோரியுள்ள குற்றவாளிகளை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் பிரித்வி ராஜ் சவான், "பயங்கரவாதத்திற்கு எதிராகப் பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கைகளில் இந்திய அரசிற்குத் திருப்தி இல்லை" என்றார்.
"பாகிஸ்தானில் பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நமது மண்ணில் நடந்துள்ள பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை வலியுறுத்தவுள்ளோம்." என்றார் அவர்.
சந்தேகத்திற்குரிய பாகிஸ்தானியர்களுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளது என்பதற்குத் தேவையான ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் நாங்களே அவர்களின் மீது நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் அதிபர் ஆஷிப் அலி சர்தாரி கூறியுள்ளது குறித்துக் கேட்டதற்கு, "இந்தியா ஏற்கெனவே தேவையான ஆதாரங்களைக் கொடுத்துள்ளது. குற்றவாளிகளை ஒப்படைத்தால் போதும்" என்றார் சவான்.
மேலும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் வாய்ப்பையும் திட்டவட்டமாக மறுத்த அவர், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை மேம்படுத்தும் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.