புதிய முதல்வர்களைத் தேர்வு செய்ய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
புதன், 10 டிசம்பர் 2008 (12:19 IST)
அண்மையில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள டெல்லி, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், மிஜோரம் ஆகிய மாநிலங்களில் முதல்வர் பதவிகளை ஏற்பவர்கள் யார் என்பது ஏறக்குறைய முடிவாகி விட்ட நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ராஜஸ்தானைப் பொருத்தவரை மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட்-க்கு முதல்வராகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சிக்கு பல சுயேச்சை எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
டெல்லியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை கூடி புதிய சட்டமன்றக் கட்சித் தலைவரை (முதல்வர்) தேர்வு செய்ய உள்ளனர். அங்கு ஷீலா தீட்சித் 3ஆவது முறையாக முதல்வராகிறார்.
சட்டீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பாஜக, அங்கு முறையே சிவராஜ் சிங் சவான், ராமன் சிங் இருவரும் 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்க உள்ளனர். இவர்கள் இருவரும் வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.