நாடாளுமன்றம் நாளை கூடுகிறது! பயங்கரவாதம் முக்கியப் பிரச்சனை!
புதன், 10 டிசம்பர் 2008 (13:46 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கருத்தொற்றுமை ஏற்படவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் சூழலில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது.
இந்த ஆண்டின் நாடாளுமன்றக் மழை காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி மூன்று பகுதிகளாக நடந்து வருகிறது. மூன்றாவது கட்டமாக நாளை தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பத்து நாட்கள் நடக்கவிருக்கிறது.
இந்தக் கூட்டத் தொடரில், பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி, சட்டப்பேரவைத் தேர்தல்கள், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக நடவடிக்கைகள் குறித்தும், கூட்டுப் புலனாய்வு அமைப்பை (Federal Investigation Agency (FIA))உருவாக்குவதற்கான சட்டரீதியான வழிமுறைகள் குறித்தும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதிக்கவிருக்கிறது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.