ஒற்றுமை காப்போம்: குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்து!
செவ்வாய், 9 டிசம்பர் 2008 (11:56 IST)
நமது நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் பக்ரீத் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல், நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இப்புனிதமான நாளில், நமது நாட்டின் அமைதி, சகோதரத்துவம், மகிழ்ச்சி, ஒற்றுமை ஆகியவற்றை காப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்வோம் என்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பக்ரீத் பண்டிகைக்கு நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் எம். ஹமீது அன்சாரி, இப்ராஹிமின் தியாக உணர்வை கொண்டாடும் இப்பண்டிகை கடவுள் மீது மனிதனுக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையை உறுதி செய்கிறது என்று கூறியுள்ளார்.
இப்பண்டிகையுடன் தொடர்புடைய, பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் உணர்வு, தானம் செய்வதில் உள்ள மகிழ்ச்சியானது ஏழை மக்களுக்கு உதவும் கருணை உணர்வையும், அன்பையும் வளர்க்கிறது என்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தேச ஒற்றுமை காப்போம்: பிரதமர்!
நாட்டு மக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், தான் என்ற அகந்தையிலிருந்து விடுபட்டு இறையுணர்விடம் சரணடைவதை இப்பண்டிகை குறிக்கிறது என்றும், ஏழை மக்களுக்கு உதவுவதையும், தானம் செய்வதையும் இப்புனித திருநாள் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
நமது தேசத்தின் ஒற்றுமையையும், கலாச்சார பிணைப்புகளையும், சகோதரத்துவத்தையும் மேலும் வலுப்படுத்த உறுதி எடுத்துக் கொள்வோம் என்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.