கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு ரூ.4.5 கோடி ஒதுக்கீடு!
வெள்ளி, 5 டிசம்பர் 2008 (18:52 IST)
அமைப்புசார துறைகளில் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களுக்கு, 71 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் வாயிலாக, புத்தாக்கப் பயிற்சி அளிப்பதற்காக ரூ.4.5 கோடி நிதியை மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு ஒதுக்கியுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் 63,700 ஓட்டுனர்கள் பயிற்சி பெற்று பயனடைவார்கள்.
தமிழ்நாட்டைச் சார்ந்த 6,750 ஓட்டுநர்கள், ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த 13,750 ஓட்டுநர்கள், மகாராஷ்டிரத்தை சார்ந்த 8,000 பேர், உத்திரப்பிரதேசம் - 6250 பேர், ஒரிசா - 4750 பேர், உத்தரகண்ட் - 4,500 பேர், குஜராத் - 4,500 பேர், மத்தியப்பிரதேசம் - 4250 பேர், கேரளா - 2650 ஒட்டுநர்களுக்கு இத்திட்டத்தின் கீழ், பாதுகாப்பான வாகனம் ஓட்டும் முறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் அரக்கோணத்தில் உள்ள சமூக சேவை அமைப்பு கழகத்தில் 250 ஓட்டுநர்களுக்கும், நாமக்கல் அசோக் லேலண்ட் ஓட்டுனர்/சேவை பயிற்சி மையத்தில் 6,000 ஓட்டுநர்களுக்கும், கோவை கோவன் ஓட்டுநர் உயர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 500 ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி அளிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களை மாநில அரசுகள் பரிந்துரைத்துள்ளன. போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த நிறுவனங்கள் அமைப்புசாரா துறை சார்ந்த ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் என மாநில அரசுகள் உறுதியளித்துள்ளன.
இத்திட்டத்தின் கீழ், நிறுவனங்களுக்கு, இரண்டு தவணைகளில் நிதி அளிக்கப்படும். பயிற்சி குறித்த காலவரையறையுடன் கூடிய சான்றிதழை அளித்த பின்பு முதல் தவணையாக 50 விழுக்காடு தொகை வழங்கப்படும். பயிற்சி நிறைவு பெற்றவுடன், தேவையான ஆவணங்களை நிறுவனங்களிடமிருந்தும், இறுதி செயல்பாட்டு அறிக்கையை மாநில அரசிடமிருந்தும் கிடைக்கப் பெற்ற பிறகு இறுதி தவணைத் தொகை அளிக்கப்படும்.