வான்வழி தாக்குதல்- உளவுத் தகவல் உண்மைதான்: விமானப்படை தளபதி

வியாழன், 4 டிசம்பர் 2008 (12:44 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுரம் மீதான தற்கொலைத் தாக்குதல் போல் இந்தியா‌வி‌ல் வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்று அரசுக்கு உளவுத் தகவல் கிடைத்தது உண்மைதான் என விமானப்படை தளபதி ஃபலி ஹோமி இன்று உறுதி செய்துள்ளார்.

விமானப்படை தினத்தை முன்னிட்டு புதுடெல்லியின் இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்தகவல் (வான்வழித் தாக்குதல்) குறித்த எச்சரிக்கை இந்திய அரசுக்கு கிடைத்தது உண்மைதான். இதையடுத்து வழக்கமான பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் நேற்று நடந்த முப்படை தளபதிகளுடனான கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டதாக ஹோமி தெரிவித்தார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது நடந்த வான்வழித் தாக்குதலைப் போன்றதொரு தாக்குதல் இந்தியாவின் மீது நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஏ.கே.அந்தோணி நேற்று தெரிவித்திருந்தார். இதன் காரணமாக முப்படைகள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்