மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: சிவசேனா வலியுறுத்தல்

மராட்டியத் தலைநகர் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

மும்பை ராஜ்பவனில் இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா நிர்வாக தலைவர் உத்தவ் தாக்கரே, மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த பிரதீபா பாட்டீலிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.

துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் பதவி விலகியது போன்றவற்றால் இதனை சரிக்கட்ட முடியாது. எனவே, சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கலைக்க வேண்டும் என்றார்.

தற்போது மக்களின் பாதுகாப்பு மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளதாகவும், தற்போதுள்ள அரசின் மீது மக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளதால், உடனடியாக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கவும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறவும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நேற்று மும்பை வந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்