பாகிஸ்தான் சக்திகளுக்குத் தொடர்பு: பிரணாப் முகர்ஜி!
வெள்ளி, 28 நவம்பர் 2008 (17:24 IST)
மும்பை தாக்குதல்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த 'சில சக்திகள்'தான் காரணம் என்று முதல் தகவல்கள் தெரிவிப்பதாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மும்பை தாக்குதல்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த 'சில சக்திகள்'தான் காரணம் என்பதற்கு ஆதாரமாக சில தகவல்கள் முதல்கட்ட விசாரணையில் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இதுபற்றி விரிவாக எதையும் தெரிவிக்க முடியாது என்றார்.
இந்தியாவிற்கு எதிராகத் தங்கள் நாட்டுச் சக்திகள் தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று செப்டம்பர் 24 அன்று ஐ.நா. பொது அவைக் கூட்டத்தின்போது பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து தேச மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தத் தாக்குதல்களில் அன்னிய சக்திகளுக்கு தொடர்பிருக்கிறது என்று கூறியிருந்தார்.
மேலும், அண்டை நாடுகளின் சக்திகள் இந்தியாவிற்குள் தாக்குதல் நடத்துவதைப் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது, அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.