மும்பை குண்டுவெடிப்பு: பிரதமர் கண்டனம்!

வியாழன், 27 நவம்பர் 2008 (11:07 IST)
மும்பை‌யி‌‌ல் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், மராட்டிய அரசுக்கு தேவையான அனைத்து அவசர உதவிகளும் உடனடியாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், மராட்டியத்தின் நிலைமையை தொடர்ந்து பிரதமர் கண்காணித்து வருவதாகவும், அம்மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முதல்வர் தேஷ்முக் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமருடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் மராட்டியத்திற்கு அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தம்மிடம் உறுதியளித்ததாகவும் கூறினார்.

மேலும், காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல்படை ஆகியோர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவ தேசிய பாதுபாப்பு படையினரையும் மராட்டியத்திற்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தேஷ்முக் கூறினார்.