கடற்கொளையர்களால் கடத்தப்பட்ட மேலும் 7 இந்தியர்கள் நாடு திரும்பினர்!
செவ்வாய், 25 நவம்பர் 2008 (10:48 IST)
சோமாலியக் கடற்கொள்ளையர்களிடம் பிணையக் கைதிகளாகச் சிக்கியிருந்த இந்தியர்களில், கடத்தப்பட்ட கப்பலின் தலைவர் உட்பட மேலும் 6 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
அவர்களின் வருகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே புதுடெல்லி இந்திராகாந்தி விமானநிலையத்தில் அவர்களது உறவினர்கள் காத்திருந்தனர். இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் அவர்கள் நாடு திரும்பினர்.
உறவினர்களின் உணர்ச்சிகரமான வரவேற்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கப்பலின் தலைவர் கோயல், கடற்கொள்ளையர்கள் தங்களை கடும் மன உளைச்சல் ஏர்படுத்தியதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் தங்களை உயிருடன் மீட்க உதவிய இந்திய அரசுக்கும், ஜப்பானிய கப்பல் நிறுவனத்திற்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கோயல் கூறினார்.
பிணையத் தொகை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளிக்க மறுத்த கோயல், அது கப்பல் நிறுவனத்திற்கும், எனக்கும், கடற்கொள்ளையர்களுக்கும் இடையே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்தார்.
இதையடுத்து கடல் கொள்ளையர்களுக்கும், அக்கப்பல் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பெருந்தொகை பிணையமாக கொடுக்க ஒப்புக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதில் நேற்று 5 இந்திய மாலுமிகள் நாடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 7 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.