அயோடின் கலக்காத உப்பு விற்றால் கடும் நடவடிக்கை!
திங்கள், 24 நவம்பர் 2008 (17:45 IST)
நமது நாட்டில் அயோடின் கலக்காத உப்பை விற்பனை செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய உப்புத் துறை ஆணையர் எஸ். சந்திரசேகரன் எச்சரித்தார்.
இதுகுறித்துச் சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் 18 மில்லியன் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2 மில்லியன் டன் உப்பு சுமார் 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 2 மில்லியன் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்திய அளவில் மூன்றாவது இடம் ஆகும்.
அயோடின் உப்பு குறைவால் பெருமளவு சுகாதாரக் கேடுகள் உருவாகின்றன. எனவே அயோடின் கலக்காத உப்பு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்படும் நிகழ்ச்சிகள் போதாது.
அயோடின் உப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க அரசு, தனியார், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். பொது வினியோகக் கடைகள் மூலம் அயோடின் உப்பு விற்பதை அதிகப்படுத்த வேண்டும். அயோடின் கலக்காத உப்பு விற்பதைத் தடுக்கச் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்.
தமிழகத்தில் 41 விழுக்காடு மக்கள்தான் அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துகின்றனர். தமிழகத்திற்குச் சராசரியாக ஆண்டிற்கு 3.18 லட்சம் டன் அயோடின் கலந்த உப்பு தேவைப்படுகிறது. கடந்த அக்டோபர் வரை 3 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ உப்பை அயோடிள் உப்பாக மாற்ற 15 பைசா செலவாகிறது.
தமிழகத்தில் சென்னை, கடலூர், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் சுமார் 3,138 உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். 48,320 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர அங்கீகரிக்கப்படாத உப்பு உற்பத்தி யூனிட்டுகள் சுமார் 7,845 உள்ளது.
ரயில் மூலம் உப்பு அனுப்பப்படுவது கண்காணிக்கப்படுகிறது. ஆனால் சாலைப் போக்குவரத்து மூலம் உப்பு அனுப்புவதைக் கண்காணிக்க வழிகள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.