ரயில்வே பணியில் மராட்டியர்களுக்கு பாரபட்சம்: சிவசேனா!

திங்கள், 24 நவம்பர் 2008 (11:22 IST)
ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும் விடயத்தில் மராட்டியர்களுக்கு பாரபட்சமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு காரணம் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் என சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிவசேனாவின் கட்சிப் பத்திரிகையான “சாம்ன”வில் இன்று அவர் எழுதி உள்ள தலையங்கத்தில், அமைச்சர் லாலு பிரசாத்தின் அதிகாரப்பிடியில் ரயில்வேத்துறை சிக்கியுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தாம் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், மராட்டியம் என்னுடையது என்றும் லாலு பிரசாத் கூறியதை பால் தாக்கரே சுட்டிக்காட்டியுள்ளார். இதனைத் தெரிவித்ததன் மூலம், எனக்கு சொந்தமானது என்னுடையது; அதேபோல் பிறருக்கு சொந்தமானதும் என்னுடையதுதான் என லாலு சூசகமாக தெரிவித்துள்ளதாக பால் தாக்கரே கூறியுள்ளார்.

மராட்டியத்தைச் சேர்ந்தவர் என்பதை லாலு நிரூபிக்க வேண்டுமானால், சேனா கட்சியினரால் உருவாக்கப்பட்ட “ஷிவ் வடா பாவ” வடைக் கடைகளை ரயில் நிலையங்களில் திறக்க அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலம் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மராட்டிய இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

அந்த வடைகளின் தரத்தை ஆய்வு செய்ய லாலு பிரசாத் விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள “ஷிவ் வடா பாவ் சம்மேளான” கடைக்கு வருகை தரலாம் என்றும் பால் தாக்கரே தனது தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்