வியட்நாம், இந்தோனேஷியாவில் குடியரசுத் தலைவர் சுற்றுப்பயணம்!

திங்கள், 24 நவம்பர் 2008 (11:19 IST)
ஆசியான் உறுப்பு நாடுகளுடனான உறவை இந்தியா மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், கிழக்கு நாடுகளான வியட்நாம், இந்தோனேஷியாவில் 10 நாட்கள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று புதுடெல்லியில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார்.

அந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருக்கும் பிரதீபா பாட்டீல், இருதரப்பு மற்றும் ராஜ்யரீதியிலான விஷயங்கள் பற்றி பேசுவார் எனறு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல், பொருளாதார, கலாச்சார உறவுகள் குறித்தும் பிரதீபா பாட்டீல் தமது பயணத்தின் போது பேச்சுகள் நடத்துவார் என்று அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.

இந்தியாவுடனான வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள், குடியரசுத் தலைவரின் இந்தப் பயணத்தின் மூலம் மேலும் வலுப்பெறும் என்றும் வெளியுறவு அமைச்சக செயலாளர் என். ரவி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வியட்நாமின் ஹோ சி மின் நகருக்கு இன்று செல்லும் குடியரசுத் தலைவர், அந்நாட்டு அதிபர் மற்ரும் பிரதமரை சந்தித்துப் பேசுகிறார்.

வியட்நாமில் 4 நாட்கள் தங்கியிருக்கும் பிரதீபா பாட்டீல், ஹனோய் நகரில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) மற்றும் வியட்நாம் வர்த்தக சபையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

வியட்நாமில் 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு 6 நாட்கள் பயணமாக இந்தோனேஷியா செல்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்