பால் தாக்கரேவை சந்தித்தார் ராஜ் தாக்கரே!

ஞாயிறு, 23 நவம்பர் 2008 (17:39 IST)
மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே, சிவசேனா கட்சியின் தலைவரும், தனது மாமாவுமான பால் தாக்கரேவை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள பால் தாக்கரேவின் மடோஸ்ரீ வீட்டிற்கு சென்ற ராஜ் தாக்கரே அவரை சந்தித்துப் பேசியதுடன், அரசியல் தவிர்த்து வேறு பல விடயங்கள் பற்றி விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவும் உடனிருந்தார்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் தாக்கரே, மாமாவின் (பால் தாக்கரே) சில புத்தகங்கள் என்னிடம் இருந்தது. அதனைத் திருப்பிக் கொடுப்பதற்காக இன்று அவரை சந்தித்தேன்.

அரசியல் தவிர பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தோம். முந்தைய நாட்களில் இருவரும் ரசித்துச் சிரித்த ஓவியங்கள் (கார்ட்டூன்) பற்றியும் பேசினோம் என்றார்.

சிவசேனா கட்சியின் தலைவர் என்றாலும், பால் தாக்கரே தேர்ந்த ஓவியர். அவரது ஓவியங்கள் ராஜ் தாக்கரேவுக்கு மிகவும் பிடிக்கும்.

உத்தவ் தாக்கரேவிடம் கட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2006 ஜனவரி 23ஆம் தேதி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ராஜ் தாக்கரே சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இன்றுதான் மீண்டும் பால் தாக்கரேவை நேரில் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்