மத உணர்வைத் தூண்டி அரசியல் லாபம் தேடுகிறது பா.ஐ.க.- இந்து மகா சபா குற்றச்சாற்று!

சனி, 22 நவம்பர் 2008 (12:31 IST)
மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் இந்து மத உணர்வைத் தூண்டி அரசியல் இலாபம் அடைய பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என்று இந்து மகா சபா குற்றம் சாற்றியுள்ளது.

புது டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் பேச்சாளர் பிரவீன் சர்மா, பயங்கரவாத நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் அதனை இந்து மகா சபா எதிர்க்கும் என்று கூறினார்.

“முன்பு இராமர் ஜன்ம பூமி பிரச்சனையைத் தூண்டி அரசியல் இலாபம் அடைந்த பா.ஜ.க. இப்பொது மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இந்து மதத் தலைவர்களை காப்பாற்றப் போகிறோம் என்று கூறி மீண்டும் மத உணர்வைத் தூண்டி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறத” என்று கூறிய பிரவீன் சர்மா, “ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி அதன் மூலம் இந்துக்களை முட்டாளாக்கும் பா.ஜ.க., சங் பரிவாரங்களின் நடவடிக்கைகளைக் கண்டு நாங்கள் களைத்து விட்டோம். இப்போது மாலேகான் குண்டு வெடிப்பில் கைதாகியுள்ளவர்களைக் காப்பாற்றப் போகிறோம் என்று கூறி நிதி கேட்கிறார்கள். மாலேகான் குண்டு வெடிப்பையும் அதில் ஈடுபட்டவர்களையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மாலேகான் குண்டு வெடிப்பையோ அல்லது எந்த விதமான பயங்கரவாத நடவடிக்கைகளையோ அகில பாரத இந்து மகா சபா ஆதரிக்காது. பயங்கரவாதத்தில் இலாபம் தேடும் பாரதிய ஜனதா ஒரு சந்தர்ப்பவாதக் கட்சி என்று குற்றம் சாற்றிய பிரவீன் சர்மா, இந்துக்களுக்காகவும், இந்துத்துவா கொள்கைக்காகவும் பாரதிய ஜனதா, பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத், ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங், அபினவ் பாரத் ஆகியன இதுவரை என்ன செய்துள்ளன என்று கேள்வி எழுப்பினார்.

அத்வானியை பிரதமராக்க முயற்சிக்கும் பா.ஜ.க., பயங்கரவாத பிரச்சனையைக் கிளப்பி அதன் மூலம் இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராக மோதவிடப் பார்க்கிறது என்று இந்து மகா சபைத் தலைவர் சந்திர பிரசாத் கெளசிக் கூறினார்.

இந்து மகா சபையின் குற்றச்சாற்றிற்கு பதில் என்ன என்று கேட்டதற்கு, “அதனால் என்ன பயன்? அதில் என்ன அரசியல் முக்கியத்துவம் உள்ளது? இந்த கேள்விகளை காங்கிரஸ் எழுப்பினால் பதில் சொல்லலாம” என்று பா.ஜ.க. பேச்சாளர் பிரகாஷ் ஜாவேத்கார் பதில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்