எல்லை ஊடுருவல் குறைந்துள்ளது - இந்தியா!

சனி, 22 நவம்பர் 2008 (01:11 IST)
கடந்த ஜூலை மாதம் 3வது வாரம் முதல் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறைந்துள்ளதாக இந்தியா கூறியுள்ளது!

இந்திய - பாகிஸ்தான் அயலுறவு அமைச்சகர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இந்தியா இவ்வாறு கூறியிருப்பது, இருதரப்பு பேச்சுவார்த்தையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 26 ஆம் தேதி முதல் நான்கு நாள் பயணமாக இந்தியா வரவுள்ள பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மாமூத் குரேஷி, இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில், எல்லைத் தாண்டிய பயங்கரவாதமும், அதனை பாகிஸ்தான் ஒடுக்குவது குறித்தும் முக்கியமாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரியும் சந்தித்துப் பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பாகிஸ்தான் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்தியா கருதுவதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்